ECONOMYSELANGOR

நீர் விநியோகத் தடை- ரவாங் மக்களிடமிருந்து புகார் வரவில்லை-சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார்

ஷா ஆலம், ஆக 10- சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளால் ஏற்பட்ட நீர் விநியோகத் தடையை எதிர்கொள்ள ரவாங் வட்டார மக்கள் முழு தயார் நிலையில் இருந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

நீர் விநியோகத் தடை தொடர்பில் வட்டார மக்கள் எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை என்று சுவா வேய் கியாட் கூறினார்.

நீர் விநியோகத்தில் மோசமான விளைவுகள் பிற்காலத்தில் ஏற்படாமலிருப்பதை தவிர்க்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஆகவே, இந்த தடையை எதிர்கொள்ள அவர்கள் போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உபகரணங்கள் 20 ஆண்டு பழைமை வாய்ந்தவை என்பதால் அதனை மாற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் நடவடிக்கை சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த நீர் விநியோகத் தடை தொடர்பில் தாங்கள் சில தினங்களுக்கு முன்னரே முகநூல் வாயிலாக வட்டார மக்களுக்குத் தெரிவித்து விட்டதாக கூறிய அவர், இருந்த போதிலும் சிலரால் நீரை சேமித்து வைக்க முடியாமல் போய்விட்டது என்றார்.

இந்த பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக இவ்வட்டாரத்திலுள்ள சுமார் 50,000 பயனீட்டாளர்களில் 70 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :