ECONOMYSELANGOR

உணவு உத்தரவாத்திற்கு நீண்டகாலத் திட்டங்களை வகுப்பீர்- சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 10- மக்களின் உணவு விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய விரிவான நீண்ட காலத் திட்டத்தை தயார் செய்யும்படி சிலாங்கூர் அரசை மாநில சுலதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழில் துறையினரும் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரும் செய்யும் உணவு உற்பத்தி சமநிலையில்  இருப்பதை உறுதி செய்வதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பில் சிலாங்கூர் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வரும் நிலையில் மாநில மக்களுக்கு உணவு உற்பத்தியில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் சிரமத்தைப் போக்குவதற்கு ஏதுவாக உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தரமாகவும் விலைக் குறைவாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

வேளாண் பொருள்களும் கால்நடைகளும் தரமானவையாகவும் எந்நேரத்திலும் கிடைக்கக்கூடியவையாகவும் இருப்பதை உறுதி செய்ய மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமும் மலேசிய புத்ரா பல்கலைககழகமும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்  கேட்டுக் கொண்டார்.

நேற்று, மலேசிய விவசாய மற்றும் வேளாண் கண்காட்சிக்கு வருகை புரிந்தப் பின்னர் அரச முகநூல் பக்கத்தில் சுல்தான் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருளை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் காய்கறிகளைப் பயிரிடும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :