ECONOMYSELANGOR

காராக் நெடுஞ்சாலையில் விபத்து- லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் தற்காலிக நிறுத்தம்

ஷா ஆலம், ஆக 11- கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் 75.9வது கிலோ மீட்டரில் தலைநகர் நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று விடியற்காலை 4.30 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தின் காரணமாக லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இச்சம்பவம் காரணமாக பகாங் மாநிலத்தின் செமென்தான் ஆற்றில் இரசாயனம் கலந்தது கண்டு பிடிக்கப்பட்ட காரணத்தால் அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த பணி நிறுத்தம் காரணமாக பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட்டின் 394 பகுதிகளில் இன்று காலை 10.00 முதல் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அது தெரிவித்தது.

பாதிக்கப்படும் இடங்களின் பட்டியல் கூடிய விரைவில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பொது மக்கள் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் 15300  எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம்.

இது தவிர, https://www.airselangor.com  என்ற அகப்பக்கத்தின் வாயிலாக பொது மக்கள் தங்கள் கேள்விகள் அல்லது புகார்களை முன்வைக்கலாம்.


Pengarang :