ECONOMYNATIONAL

தரவுகளின் மறுஆய்வுக்குப் பின்னரே கோழி ஏற்றுமதி தடை, உச்சவரம்பு விலை மீது முடிவு எடுக்கப்படும்

புத்ரா ஜெயா, ஆக 16– கோழிக்கான தேவை மற்றும் விநியோகம் தொடர்பான முழு அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் அரசு துறைகளும் பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாட் சிறப்பு பணிக்குழுவிடம் சமர்ப்பித்தப் பின்னரே கோழி ஏற்றுமதிக்கான தடை நீக்குவது, கோழி மற்றும் முட்டைக்கு புதிய உச்சவரம்பு விலையை நிர்ணயிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இதன் தொடர்பான விரிவான அறிக்கையை ஒரு வார காலத்தில் அந்த பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கும்படி கால்நடை சேவைத் துறை, மலேசிய புள்ளிவிபரத் துறை உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர்  டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறினார்.

சிங்கப்பூரில் கோழிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் கோழி ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட வேண்டும் என பல கோழி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக ஆய்வு முடிவுகளை பணிக்குழு மதிப்பீடு செய்யும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கோழி ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா? நடப்பு மானியத் தொகை திட்டத்தை தொடர்வதா? என்பது குறித்து  பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் விரிவான அறிக்கைக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

நாம் எடுக்கும் முடிவுகள் யாவும் ஆகக்கடைசி தரவுகள் மற்றும் ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். ஏற்றுமதிக்கான தடையே நீக்குவதற்கு முன்னர் உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் கோழியின் எண்ணிக்கை ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :