ECONOMYSELANGOR

சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடம்- சார்ல்ஸ் சந்தியாகோ தகவல்

ஷா ஆலம், ஆக 16- சிலாங்கூர் மாநில அரசினால் அமைக்கப்பட்ட சிலாங்கூர்  இந்தியர் ஆலோசக மன்றத்தில் (எஸ்.ஐ.சி.சி.)  மக்கள் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுவிலும் நியமனம் பெறுவதாக அவர் சொன்னார்.

இந்த ஆலோசக மன்றத்தில் கல்விமான்கள், அரசு சாரா அமைப்புகளின் (என்.ஜி.ஒ.) பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், வணிகர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், அடிமட்டத் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர் அவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசக மன்ற உறுப்பினர்களாக பல தொழில் வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

மலேசியா வென்ஷர் கெப்பிட்டல் மேனெஜ்மெண்ட் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாகம் அல்லாத சுயேச்சை இயக்குநர் மனோகரன் மொட்டையன் மற்றும் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய தொழிலியல் வர்த்தக சபையின் தலைவர் நிவாஸ் ராகவன் ஆகியோரும் அந்த மன்றத்தில் இடம் பெற்றவர்களில் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

மேலும் மைஸ்கில் அறவாரியத்தின் இயக்குநர் பசுபதி சிதம்பரம், 27 குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஷ் இராமச்சந்திரன் உள்ளிட்ட மேலும் அறுவரும் இம்மன்றத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசக மன்றம் தலைமைத்துவ ஆலோசனைகளை வழங்கும் அதே வேளையில் இந்திய சமூகத்தின் மேம்பாடு தொடர்பான பரிந்துரைகளையும் மாநில அரசுக்கு வழங்கும் என அவர் தெரிவித்தார்.

சமூகத்தில் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான கருத்துகளை மாநில அரசு பெற்றுள்ளதால் இந்த ஆலோசக மன்றத்தின் உருவாக்கம் மிகவும் அவசியமாகிறது என அவர் கூறினார்.

இந்திய சமூகத்தினர் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழியாக அல்லது இரண்டாவது தளமாக இந்த மன்றம் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :