ECONOMYSELANGOR

சிடேக் ஏற்பாட்டில் ‘‘டாப் இ.சி.எம்.“ விருதளிப்பு- வெ.60,000 பரிசு வெல்ல மின்-வணிகர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஆக 24- சிலாங்கூர் இலக்கவியல் பொருளாதார தகவல் தொழில்நுட்ப கழகத்தின் (சிடெக்) ஏற்பாட்டில் நடத்தப்படும் மலேசிய முதன்மை மின்-வாணிக விருதளிப்பின் (டாப் இ.சி.எம்.) வாயிலாக 60,000 வெள்ளி வரையிலான பரிசைத் தட்டிச் செல்வதற்குரிய வாய்ப்பினை 228 இலக்கவியல் தொழில்முனைவோர் பெறுகின்றனர்.

தங்கள் பொருள்களையும் சேவையையும் இணையத் தளம் வாயிலாக சந்தைப்படுத்துகின்ற சிறந்த இலக்கவியல் வணிகர்களை அங்கீகரிக்கும் நோக்கில் வரும் அக்டோபர் மாதம் இந்நிகழ்வு நடத்தப்படுவதாக சிடெக் தலைமை செயல்முறை அதிகாரி யோங் காய் பிங் கூறினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்த விருதளிப்பு நிகழ்வு முதன் முறையாக நடத்தப்பட்ட போது 60 இணைய வணிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 181 பேராகவும் அவர்களின் வர்த்தக மதிப்பு 4 கோடியே 70 லட்சம் வெள்ளியாகவும் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

மின்-வணிகம் துரித வளர்ச்சி கண்டு வருவதை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுகிறது. மின்-வணிகம் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் 12 கோடியே 30 லட்சம் வெள்ளி வணிகம் பதிவு செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இத்துறையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதளிப்பு நிகழ்வை நடத்துகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த டாப் இ.சி.எம். நிகழ்வு ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

சிலாங்கூரை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாக்கும் மாநில அரசின் இலக்கிற்கேற்ப இலக்கவியல் பொருளாதாரத்திற்கு உந்துதல் அளிக்கும் சரியான தடத்தில் சிடேக் பயணிப்பதை இந்த சிறப்பான அடைவு நிலை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :