ECONOMYSELANGOR

சுயத் தொழில் செய்வோரில் 49,103 பேர் சொக்சோ சுய பாதுகாப்புத் திட்டத்தில் இன்னும் சேரவில்லை

ஷா ஆலம், ஆக 24- சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் சுயத் தொழில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்றுள்ள சொந்த தொழில் செய்வோரின் எண்ணிக்கை சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை மிகவும் குறைவாகவே உள்ளது.

மாநிலத்தில் சுயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 49,103 பேர் இந்த பாதுகாப்புத் திட்டத்தில் இன்னும் பதிந்து கொள்ளவில்லை என்று மாநில சொக்சோ இயக்குநர் ஜைனோல் அபு கூறினார்.

இவ்வாண்டில் 120,000 பேர் வரை இத்திட்டத்தில் பங்கேற்று சந்தா செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை குறைவாவே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பணியின் போது விபத்து ஏற்படும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததே பலர் இத்திட்டத்தில் பங்கேற்காததற்கு காரணமாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

சொக்சோவில் பதிந்து சந்தா செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு சுயத் தொழில் செய்வோர் மத்தியில் குறைந்தே காணப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி பலனடைவதற்கு அவர்களுக்கு உரிய ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

சிலாங்கூரில் இவ்வாண்டு 70,987 பேர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், கடந்த 2017 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 359,531 பேர் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்றார்.

இந்த சுயத் தொழில் பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் மேல் விபரங்களை https://matrix.perkeso.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது அருகிலுள்ள சொக்சோ அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :