ECONOMYNATIONAL

1எம்டிபி வழக்கில் ஆஜராக இன்று நீதிமன்றம் வருகிறார் நஜிப்

கோலாலம்பூர், ஆக 25- எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்  நிறுவனத்தின்
4 கோடியே 2 லட்சம் வெள்ளி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 1எம்டிபி பெர்ஹாட் வழக்கு விசாரணைக்காக இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த முன்னாள் பிரதமரை நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் செக்வேரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு ஆஜர் படுத்துமாறு சிறைச்சாலைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற வழக்குகளில் ஒரு கைதியை மற்ற குற்றங்களுக்காகவோ அல்லது சாட்சியாகவோ தனது விசாரணையில் ஆஜராகும்படி சிறைச்சாலைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது வழக்கமான நடைமுறையாகும்.

நஜிப் தனது பதவியைப் பயன்படுத்தி 1எம்டிபி நிதியில் இருந்து 230 கோடி வெள்ளி லஞ்சம் பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகளையும், அதே தொகையில் பணமோசடி செய்ததாக 21 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிதியில் 4.2 கோடி வெள்ளியை மோசடி செய்ததற்காக நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதம் ஆகியவற்றை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து நஜிப் நேற்று சிறைத் தண்டனையை அனுபவிக்க காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் குழு, கடந்த 2020  ஜூலை 28 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப்பிற்கு எதிராக அளித்த தீர்ப்பை நேற்று முன்தினம் மறுவுறுதிப்படுத்தியது.


Pengarang :