ECONOMYSELANGOR

வீட்டை சீரமைக்க விரும்பும் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் உரிய தரப்பிடம் அனுமதி பெற வேண்டும்

ஷா ஆலம், ஆக 26- அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றம் அல்லது விரிவாக்கம் செய்ய விரும்புவோர் ஜே.எம்.பி. எனப்படும் கூட்டு நிர்வாக மன்றம் மற்றும் மேலாண்மைக் கழகத்தின் (எம்.சி.) அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்பான விதிகள் 2013 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மைச் சட்டத்தில் (சட்டம் 757) இடம் பெற்றுள்ளதாக காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

கூட்டு நிர்வாக மன்றம் மற்றும் ஊராட்சி மன்றத்தின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அச்சட்டம் கூறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எந்தவொரு சீரமைப்பு பணியையும் தங்கள் குடியிருப்புக்குள் மட்டுமே மேற்கொள்ள முடியுமே தவிர அதனைத் தாண்டிய இடங்களில் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கட்டிட பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு ஜே.எம்.பி. மற்றும் எம்.சி. தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :