ECONOMYSELANGOR

மக்கள் மனதைக் கவர பக்கத்தான் சுய ஆற்றலைப் பெருக்க வேண்டும்- அன்வார் வலியுறுத்து

சுபாங் ஜெயா, ஆக 26- தேசிய முன்னணியில் தற்போது நிலவி வரும் உட்பூசல் காரணமாக பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் விஷயத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மெத்தனமாக இருக்க க்கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக அந்த கூட்டணி தனது சுய ஆற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவருமான அவர் சொன்னார்.
மக்கள் மனதைக் கவர்வதற்கும் எடுத்துக் கொண்ட போராட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதை உணர்த்துவதற்குமான வழி வகைகளை அந்த கூட்டணி ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இருபத்து இரண்டு மாத ஆட்சி காலம் உள்பட நமது தரப்பில் உள்ள பலவீனங்களை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். நாம் கூறியது போல் அந்த ஆட்சிக் சீர்திருத்தக் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.

சீர்திருத்த கொள்கைகளுக்கு முரணாக இருந்த சில முடிவுகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது பலவீனங்களை ஒப்புக் கொண்டு அவற்றின் மீது மறுபடியும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

டாருள் ஏசான் கழகத்தின் ஏற்பாட்டில் சுபாங் ஜெயா, டோர்செட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மலேசியாவின் சிறந்த எதிர்காலத்திற்கான வழி என்ற கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைக் களைந்து அவர்களின் நம்பிக்கையை மீண்டெடுப்பதற்கான முயற்சிகளை ஹராப்பான் கூட்டணி முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :