ECONOMYNATIONAL

2018 தேர்தலில் வெற்றிக்குப் பின்னரே ஊழல் தலைவர்களை பக்கத்தான் அம்பலப்படுத்தியது

பாங்கி, ஆக 26- கடந்த 2018 ஆம்  ஆண்டு பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றப் பின்னரே 60 ஆண்டுகால பாரிசான் நேஷனல் ஆட்சியில் இல்லாத அளவுக்கு நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

அந்த கூட்டணியின் வெற்றியின் விளைவாக ஊழலில் சம்பந்தப்பட்ட பல முக்கியத் தலைவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்று பக்கத்தான் ஹராப்பான் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் பக்கத்தான் வெற்றி பெற்ற பிறகு நட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. நாட்டின் ஆட்சி முறை எவ்வளவு சீர்கெட்டுள்ளது என்பதை நாம் கண்கூடாக காண முடிந்தது என்றார் அவர்.

அந்த தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டாது போயிருந்தால் இப்போதைய நிகழ்வுகள் எதனையும் நாம் காணமுடியாமல் போயிருக்கும். ரபிஸி  ரம்லி (கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர்) அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்தினார். மக்களின் வாக்குகள் மகத்துவமிக்கவை என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தி விட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற  பாரிசான் மற்றும் பெரிக்கத்தானை நிராகரிப்போம் பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

கெஅடிலான், ஜசெக, அமானா  மற்றும் பெர்சத்து ஆகிய கட்சிகளுடன் இணைந்து 14 வது பொதுத் தேர்தலை சந்தித்த பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி 113 இடங்களை பெற்று ஆட்சியை அமைத்தது. அத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு 79 இடங்கள் மட்டுமே கிடைத்தன.


Pengarang :