ECONOMYSELANGOR

புக்கிட் ஜெலுத்தோங், ரூமா இடாமான் திட்டத்தை மந்திரி புசார் தொடக்கி வைத்தார்

ஷா ஆலம், ஆக 26- மாநில அரசின் மற்றொரு கட்டுப்படி விலை வீடமைப்புத் திட்டமான ரூமா இடாமான் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தொடக்கி வைத்தார்.

ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கான அடிப்படை வேலைகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் இதன் கட்டுமான வரும் 2025 மூன்றாம் காலாண்டில் முற்றுப் பெறும் என்று அமிருடின் தமதுரையில் குறிப்பிட்டார்.

வழக்கமாக காலியாக உள்ள நிலத்தில் மேற்கொள்ளப்படும் மற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வுகளைப் போல் அல்லாமல் பைலிங் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட விட்ட நிலையில் நடத்தப்படும் நிகழ்வு இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.


சொந்த வீட்டைப் பெற வேண்டும் என்ற மக்களின் கனவை நனவாக்குவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இந்த திட்டம் புலப்படுத்துகிறது என அவர் சொன்னார்.
தலா இரண்டரை லட்சம் வெள்ளி மதிப்பிலான 1,260 வீடுகளை உள்ளடக்கிய இத்திட்டத்தை பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து காகாசான் நாடி செர்காஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.

மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள், தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி, சமையலறை கேபினட், ஹீட்டர், குளிர்சாதனம் மற்றும் இரு கார் நிறுத்த வசதிகளை இந்த வீடுகள் கொண்டுள்ளன.

இது தவிர, நீச்சல் குளம், ஜிம்னேசியம், பல்நோக்கு மண்டபம், பூப்பந்து மைதானம், பாலர் பள்ளி, வாசிப்பு அறை, விளையாட்டு பூங்கா, மெது நடைக்கான தடம் ஆகிய வசதிகளும் உள்ளன.


Pengarang :