ECONOMYHEALTHSELANGOR

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பயணத் திட்டம் செப்டம்பரில் மீண்டும் தொடரும்

ஷா ஆலம், ஆக 29- ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பயணத் தொடரின் இரண்டாம் கட்டம் வரும் செப்டம்பர் இறுதி தொடங்கி அக்டோபர் மத்தியில் முற்றுப் பெறும்.

கிள்ளான், சபாக் பெர்ணம், சிப்பாங், உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் இந்த மக்கள் நலத் திட்டப் பயணத் தொடரில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மந்திரி புசார்  சொன்னார்.

வரும் செப்டம்பர் மாதம் இறுதி தொடங்கி அக்டோபர் மாதம் வரை நான்கு மாவட்டங்களில் நாம் இந்த பயணத் திட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். இதில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மற்றும் மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என டத்தோஸ்ரீ அமிருடின் குறிப்பிட்டார்.

மாநில அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் இன்று 2022 ஃபாலாக் மாத நிகழ்வை முடித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி அம்பாங் ஜெயா தாமான் கோசாசில் முதன் முறையாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோல லங்காட், பந்தாய் மோரிப் மற்றும் கோல சிலாங்கூர் அரங்கம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.

மக்கள் நலனுக்காக மாநில அரசு 60 கோடி வெள்ளி மதிப்பில் தரம் உயர்த்தியுள்ள பெடுலி ராக்யாட் திட்டம் இந்த பயணத் தொடரின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :