ECONOMYHEALTH

20 சிறார்களில் ஒருவருக்கு மனநல பாதிப்பு- சுகாதாரத் துணையமைச்சர் தகவல்

ஷா ஆலம், ஆக 30– ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான சிறார்கள் மத்தியில் 20 பேருக்கு ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில் மனநலப் பாதிப்பு உள்ளதை 2019 ஆம் ஆண்டு தேசிய சுகாதார மற்றும் நோயற்ற நிலை மீதான ஆய்வுகள் காட்டுவதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

பத்து முதல் 19 வயது வரையிலான பதின்ம வயதினரில் எண்மருக்கு ஒருவர் மன நலப்பாதிப்புக்கு உள்ளாவது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய நிலையில் சிறார்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான மனநலம் மற்றும் உளவியல் துணை சுகாதார முறையை வலுப்படுத்துவது தொடர்பான மலேசியாவின் அறிக்கை மற்றும் விளக்கப்படத்தை வெளியிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் சுமார் 424,000 சிறார்கள் மன நலப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், எனினும், இந்த பாதிப்பைக் கொண்டுள்ள பலர் மருத்துவச் சிகிச்சைப் பெற முன்வருவதில்லை என்றார்.

மலேசியாவில் சிறார்களும் பதின்ம வயதினரும் கடுமையான மனநலப் பிரச்னையை எதிர்நோக்குகின்றனர். பலவீனமான மன ஆரோக்கியம், வன்முறைக்கு ஆளாவது, நண்பர்களாக பகடிவதைக்கு ஆளாவது, சமூகத்திலிருந்து விலகியிருப்பது, தனிமை போன்றவை இதற்கான காரணங்களாகும் என்றார் அவர்.

இந்த ஆய்வின் முடிவுகளை கொள்கைகளாகவும் நடைமுறைகளாகவும் அமல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முழு கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :