ECONOMYNATIONAL

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனைக் கொள்முதல் சட்டங்களை தரம் உயர்த்த அமைச்சு திட்டம்

கோலாலம்பூர், ஆக 30- பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனைக் கொள்முதல் தொடர்பான சட்டங்களை தரம் உயர்த்த உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இத்துறையில் நடைபெறும் மோசடிகளால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவோர் பெரும் இழப்பை எதிர்நோக்குவதைத் தடுக்க இந்நடவடிக்கை அவசியமாவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனைக் கொள்முதல் மோசடி தொடர்பில் 1,126 புகார்கள் பயனீட்டாளர் கோரிக்கை விசாரணை  மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் நடப்புச் சட்டங்களை மேம்படுத்துவது மற்றும் லெமன் லா எனப்படும் புதிய சட்டத்தை வரைவது தொடர்பில் பயனீட்டாளர் சங்கங்களும் அமைச்சும் பரிந்துரை செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்தை வரைவது தொடர்பில் அமைச்சு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

கார்கள் போன்ற ஆறு மாதத்திற்கும் மேற்பட்ட ஆயுளைக் கொண்ட பொருள்களை வாங்கும் பயனீட்டாளர்கள் பழுது மற்றும் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீட்டைப் பெற இந்த லெமன் லா சட்டம் வகை செய்கிறது.

நீடித்த உத்தரவாத பாதுகாப்புத் திட்டம் குறித்து கருத்துரைத்த அமைச்சர், பயன்படுத்தப்பட்ட வாகனத் தொழில் துறையை மேம்படுத்த குறிப்பாக பயனீட்டாளர்களுக்கு பாதுகாப்பளிக்க அத்துறை சார்ந்தவர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் அமைச்சு முழு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :