ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் ஆயுள் காப்புறுதித் திட்டத்திற்கு பொது மக்கள் வரவேற்பு

கோம்பாக், செப் 1- “இன்சான்“ எனப்படும் சிலாங்கூர் அரசின் ஆயுள் காப்புறுதி திட்டத்தின் வாயிலாக மாநிலத்திலுள்ள சுமார் 60 லட்சம் பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலனுக்காக மாநில அரசு இதுவரை அமல்படுத்திய திட்டங்களில் இதுவே மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

நியாயமான கட்டணத்தில் காப்புறுதி பாதுகாப்பினை வழங்கும் மாநில அரசின் இத்திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக வணிகரான ஓஸ்மான் ஜமாலுடின் (வயது 51) கூறினார்.

எனக்கு பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளதையும் நான் பாதுகாப்பாக உள்ளதையும் உணர்கிறேன். இது உண்மையில் மிக அருமையான திட்டம் என அவர் குறிப்பிட்டார்.

வரும் அக்டோபர் மாதம் இந்த காப்புறுதி திட்டத்திற்கான பதிவு தொடங்கும் போது நானும் எனது குடும்பத்தினரும் விரைந்து பதிவு செய்யவுள்ளோம் என்றார் அவர்.

இதனிடையே, இந்த காப்புறுதித் திட்டம் குறித்து கருத்துரைத்த வணிகரான எஸ். குணசேகரன் (வயது 67), இந்த திட்டத்தை புத்ரா ஜெயாவும் மற்ற மாநிலங்களும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மாநில நிலையில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவது இதுவே முதன் முறை என கருதுகிறேன். சிலாங்கூர் மாநில மக்களுக்கு கிடைக்கும் இந்த அனுகூலத்தை அனைத்து மக்களும் பெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 60 லட்சம் பேர் பொது குழு காப்புறுதி சலுகையைப் பெறுவர் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இந்த திட்டத்திற்கு உண்டாகும் செலவு அனைத்தையும்  மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் எனக் கூறிய அவர், பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை இந்த காப்புறுதி திட்டத்தில் பங்கேற்கலாம் என்றார்.

இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு சிலாங்கூரில் பிறந்தவராகவும் சிலாங்கூர் வாக்காளராகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.  6,000 கோடி வெள்ளி மதிப்பிலான இந்த காப்புறுதித் திட்டத்திற்கான பதிவு வரும் அக்டோபர் முதல் தேதி  தொடங்கவுள்ளது.


Pengarang :