ECONOMYSELANGOR

இலவச நீர் விநியோகத் திட்டம் எம்40 பிரிவினருக்கும் விரிவாக்கம்- பொது மக்கள் வரவேற்பு

கோம்பாக், செப் 1- மாதம் ஐயாயிரம் வெள்ளி குடும்ப வருமானம் கொண்ட தரப்பினருக்கும் இலவச நீர் விநியோகத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதானது நடுத்தர வருமானம் கொண்ட எம்40 தரப்பினரையும் மாநில அரசு புறக்கணிக்கவில்லை என்பதை புலப்படுத்துவதாக உள்ளது.

நடுத்தர வருமானம் கொண்ட தரப்பினரும் எதிர்நோக்கும் சிரமங்களை மாநில அரசு உணர்ந்துள்ளதை இந்த நடவடிக்கை உணர்த்துவதாக வர்த்தகரான ஷாபி ஹூசேன் (வயது 50) கூறினார்.

நிச்சயமற்ற பொருளாதார சூழலை எதிர்நோக்கி வரும் இக்காலக்கட்டத்தில் எங்களுக்கும் இந்த இலவச நீர் விநியோகத் திட்டத்தில் வாய்ப்பு வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, எம்40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறும் அதிக குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அவர்களுக்கும் இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று குமாஸ்தாவான மய்ஸாத்துல் ஹவானி கூறினார்.

அனைத்து எம்40 தரப்பினரும் வசதியானவர்கள் எனக் கூறிவிட முடியாது. சில குடும்பங்களில் ஒருவர் மட்டுமே வேலை செய்து மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்று அவர் சொன்னார்.

இருபது கனமீட்டர் நீரை இலவச குடிநீரை இலவசமாக வழங்கும் திட்டம் மேலும் ஒரு லட்சம் பேருக்கு விரிவுபடுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இத்திட்டத்திற்கு உண்டாகும் 3 கோடி வெள்ளி செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த குடிநீர் விநியோகத் திட்டத்தில் பங்கு பெறுவதற்கான வருமான வரம்பு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்படுவதன் மூலம் இத்திட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :