ECONOMYSELANGOR

சிலாங்கூர் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 340 கோடி வெள்ளியாக அதிகரிப்பு- மந்திரி புசார்

உலு லங்காட், செப் 5- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை சிலாங்கூர் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 340 கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான உயர்ந்த பட்ச நிதிக் கையிருப்பு இதுவாகும்.

மந்திரி புசாராக தாம் பதவியேற்ற போது மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 210 கோடி வெள்ளியாக மட்டுமே இருந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2018இல் நான் பதவிக்கு வந்த போது நிதிக் கையிருப்பு 210 கோடி வெள்ளியாக இருந்தது. இந்த நிதியைக் கொண்டு பல்வேறு சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியில் நிர்வாகத்தை வழி நடத்தினோம். எனது பதவி காலத்தில் இந்த தொகை 130 கோடி வெள்ளி அதிகரிப்பைக் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனுக்காக தடுப்பூசித் திட்டம், சிலாங்கூர் இல்திஸாம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அமல்படுத்திய போதிலும் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 210 கோடி வெள்ளியிலிருந்து 340 கோடி வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே அதிகப்படியான கையிருப்பாகும் என்றார் அவர்.

தாமான் ரிக்ரியாசி பண்டார் மக்கோத்தாவில் நேற்று நடைபெற்ற காஜாங் தொகுதி நிலையிலான தங்லுங் விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்திய போதிலும் மாநிலத்தின் நிதி கையிருப்பு 300 கோடி வெள்ளியாக உள்ளதாக அமிருடின் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :