ECONOMYNATIONAL

1எம்டிபி நிதி மோசடி-  குவைத்தில் எம்.ஏ.சி.சி. விசாரணை

கோலாலம்பூர், செப் 5- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) குவைத்தில் 1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1எம்டிபி) நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக பல நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்த ஆணையம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குவைத்தில் உள்ள அமலாக்க அமைப்புகளுடன் பல சந்திப்புகளை நடத்தியுள்ளதாக அது கூறியது.

தற்போது, பரஸ்பர சட்ட உதவி மூலம்  குவைத் அதிகாரிகளிடமிருந்து ஆதாரங்களுக்காக எம்.ஏ.சி.சி. காத்திருக்கிறது. மேலும் இவ்விவகாரம் குவைத் தரப்பால் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

1எம்டிபி மற்றும் அது சம்பந்தப்பட்ட பல நிறுவனங்களின் மோசடியின் விளைவாக இழந்த சொத்துகள் மற்றும் பணத்தை மீட்பதில் எம்.ஏ.சி.சி. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியான தொழிலதிபர் லோ டேக் ஜோ அல்லது ஜோ லோ கடந்த ஜூலை 16 ஆம் தேதி முன்வைத்த சமரசப் பரிந்துரையை எம்.ஏ.சி.சி. முற்றிலுமாக நிராகரித்ததாகவும் அது கூறியது.

பொது மக்கள் மத்தியில்  குழப்பமும் விசாரணைக்கு பாதிப்பும் ஏற்படுவதை தவிர்க்க இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஆருடத்தையும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் எம்.ஏ.சி.சி. கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.


Pengarang :