ECONOMYHEALTHSELANGOR

மாநில அரசின் திட்டங்களில் பொது சுகாதாரத்திற்கு முதலிடம்- மந்திரி புசார்

காஜாங், செப் 5– மாநில மக்கள் உரிய பலனை பெறுவதற்கு ஏதுவாக வரும் ஆண்டுகளில் மாநில அரசின் திட்ட நிகழ்வு நிரலில் விழிப்புணர்வு மற்றும் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஈராண்டுகளுக்கு முன்னர் நாடு கோவிட்-19 பெருந்தொற்றை எதிர் கொண்டது முதல் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இலவச தடுப்பூசி வழங்குவது, சிலாங்கூர் சாரிங் திட்டம் மற்றும் சிலாங்கூர் மன நல ஆரோக்கியத் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு மாநில அரசு பெருந்தொகையை செலவிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெருந்தொற்று காலத்தில்  கோவிட்-19 நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டோம். வரும் காலத்தில் நாம் மாநில அரசை நிர்வகிக்கும் பட்சத்தில் சுகாதாரத் திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

காஜாங் மாநில நிலையிலான தங்லுங் விழாவை இங்குள்ள தாமான் ரெக்ராசி பண்டார் மக்கோத்தாவில் நேற்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

மக்களை பாதுகாப்பதற்கு மேலும் ஒரு காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், நாம் மக்களை காக்கவும் விரும்புகிறோம். காரணம், கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்குப் பின்னர் பலர் துயரங்களை அனுபவிக்கின்றனர். மேலும் பலர் இறந்தும் போயுள்ளனர் என்றார் அவர்.

ஆகவே, வரும்  அக்டோபர் மாதம், முடிந்தால் அடுத்த ஆண்டும் சிலாங்கூர் ஆயுள் காப்புறுதி திட்டத்தை (இன்சான்) அறிமுகப்படுத்தவுள்ளோம். இதற்கான பிரிமியத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அவர் சொன்னார்.


Pengarang :