ECONOMYSELANGOR

கிள்ளான் துறைமுக சுற்றுலா கப்பல் முனையத்தை சிலாங்கூர் சுல்தான் திறந்து வைத்தார்

கிள்ளான், செப் 5- இங்குள்ள  கோலக் கிள்ளான் சுற்றுலா கப்பல் முனையத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

அந்த பிரதான சுற்றுலா முனையத்தை போஸ்டட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து கிள்ளான் போர்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் மற்றும் வெஸ்ட்போர்ட்ஸ் மலேசியா சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் பொறுப்பேற்று நடத்துகின்றன.

இந்த முனையத்தை புதிய நிர்வாகம் ஏற்று நடத்துவது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக சுல்தான் தமதுரையில் குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த இந்த முனையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது வரலாற்றுப் பூர்வ நிகழ்வாகும் என்றும் அவர் வர்ணித்தார்.

இதுவொரு வரலாற்றுப் பூர்வ மற்றும் பெருமை கொள்ளக்கூடிய தருணமாகும். காரணம், கோவிட்-19 நோய்ப் பரவல் ஏற்பட்டது முதல் இந்த முனையம் செயல்படாமல் இருந்ததோடு மாநிலத்திற்கு சுற்றுப்பயணிகள் வருகையும் இதனால் பாதிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

மேன்மை தங்கிய தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர்  நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் மற்றும் பி.கே.சி.டி. தலைவர் டத்தோ அஸ்மான் ஷா முகமது யூசுப் ஆகியோரும் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தனர்.

சுமார் 69.8 ஹெக்டர் நிலப்பரப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த முனையம் சுற்றுலா கப்பல்களுக்கு மட்டுமின்றி இராணுவக் கப்பல்களுக்கும் சேவையை வழங்கி வருகிறது.


Pengarang :