ECONOMYHEALTHNATIONAL

ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனை செய்வதை ஊக்குவிக்க விடுமுறை தருவீர்- முதலாளிகளுக்கு வேண்டுகோள்

ரெம்பாவ், செப் 12– ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு முதலாளிகள் ஒரு நாள் மருத்துவ விடுமுறை தர வேண்டும் என சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை உறுதி செய்வதில் அரசாங்க மற்றும் தனியார் துறை முதலாளிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இந்த மருத்துவ நோக்கத்திற்காக முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வகை செய்யும் விதிமுறைகள் குறித்து ஆராயும்படி நிதியமைச்சை தாம் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

வழக்கமாக ஓராண்டிற்கு ஒரு முறை மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக தொழிலாளர்களுக்கு முதலாளிகள் விடுமுறை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது என்றார் அவர்.

ஆகவே, ஊழியர்கள் இத்தகைய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆண்டிற்கு ஒரு நாள் விடுமுறையை முதலாளிகள் வழங்க வேண்டும் என அவர் சொன்னார்.

இங்குள்ள ஸ்ரீ கெண்டோங் பாலாய் ராயாவில் நேற்று நடைபெற்ற ரெம்பாவ் தொகுதி நிலையிலான மெர்டேக்கா நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :