ECONOMYSELANGOR

புக்கிட் செராக்கா நில விவகாரம் குறித்து பொது மக்களுக்கு இவ்வாரம் விளக்கமளிக்கப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், செப் 12- பல்வேறு தரப்பினரால் சர்ச்சையாக்கப்பட்டு வரும் புக்கிட் செராக்கா பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப்பகுதியின் நில அந்தஸ்து குறித்து வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை பொது மக்களுக்கு விரிவாக விளக்கப்படும்.

அந்த நில விவகாரம் குறித்து பொது மக்கள் மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் அதன் தொடர்பான பல உண்மைகள் அம்பலப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதன் தொடர்பான உண்மைகளை எடுத்துரைப்பதன் மூலம் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சிலாங்கூர் மீது களங்கம் கற்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கவும் இயலும் என்று அவர் சொன்னார்.

தற்போது புக்கிட் செராக்கா விவகாரம் தலையெடுத்துள்ளது. தற்போது வெளியிட்டப்பட்ட படம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான தகுதியை நீக்கம் செய்த இடத்தை உள்ளடக்கவில்லை. அந்த இடம் வெகு காலத்திற்கு முன்னரே அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.

ஆகவே, வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை மாநில ஆட்சிக்குழு இது குறித்த தெளிவான விளக்கத்தை தரும். இவ்விவகாரத்தில் நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்காக இதில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? நிலம் யாருக்கு கொடுக்கப்பட்டது? எவ்வாறு கொடுக்கப்பட்டது போன்ற விபரங்களை நாங்கள் வெளியிடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோம்பாக், தாமான் மெலாவத்தியில் நேற்று நடைபெற்ற  கெஅடிலான் கட்சியின் மாபெரும் பிரசார பேரணியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான கட்டுப்கோப்புடன் இருக்கிறது. தற்போது மாநில அரசுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் ஒன்றுதான் புக்கிட் செராக்கா நில விவகாரம், அந்நில விவகாரம் குறித்து அவ்வப்போது மக்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என அவர் மேலும் கூறினார்.


Pengarang :