ECONOMYSELANGOR

மக்கள் நலத் திட்டங்களை அமல் செய்வதில் சிலாங்கூரை புத்ரா ஜெயா முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்

கோம்பாக், செப் 15- விலைவாசி உயர்வினால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை புத்ரா ஜெயா முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அமைதியுடனும் சுபிட்சத்துடனும் வாழ்வதற்கு ஏதுவாக அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வழிவகைகளை ஆட்சியாளர்கள் ஆராய வேண்டும் என்று உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் சஹாரி சுங்கிப் கூறினார்.

மக்களின் சுமையைக் குறைத்து அவர்கள் அமைதியான முறையில் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் ஒரு அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். ஆகவே, பொருள்களின் குறிப்பாக உணவு விலையைக் கட்டுப்படுத்துவதில் முறையான செயல்திட்டங்கள் தேவை என அவர் வலியுறுத்தினார்.

உலு கிள்ளான், கம்போங் கெமென்சோவில் இன்று நடைபெற்ற மாநில அரசின் மலிவு விலை விற்பனைத் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையைவிட குறைவான விலையில் விற்பனை செய்யும் மாநில அரசின் இத்திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு மக்கள் மீது கொண்டுள்ள பரிவைக் காட்டும் காரணத்தால் இத்திட்டத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன். மக்களின் நலன் கருதி கடந்தாண்டு இறுதி முதல் இந்த திட்டத்தை மாநில விவசாய மேம்பாடு கழகம் (பி.கே.பி.எஸ்.) மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

தற்போது தங்களின் அணுகுமுறையை சற்று மாற்றி லோரிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருள்களை கொண்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :