ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அச்சு வார்ப்பு இயந்திரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 676 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

நீலாய், செப் 16- தொழில்துறைக்கான அச்சு வார்ப்பு இயந்திரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 676 கிலோ மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை அரச மலேசிய சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய போதைப் பொருள் முறியடிப்பு நடவடிக்கை இது என வர்ணிக்கப்படுகிறது.

இம்மாதம் 10 ஆம் தேதி கோலக் கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் 12.1 மீட்டர் நீளம் கொண்ட கொள்கலன் ஒன்றின் மீது சுங்கத் துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சோதனையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ  ஜசாலி ஜோஹான் கூறினார்.

அந்த போதைப் பொருள் தேயிலைப் பொட்டலங்களில் அலுமினிய காகிதத்தால் சுற்றப்பட்டு பெரிய அளவிலான அச்சுவார்ப்பு இயந்திரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக போதைப் பொருள் கடத்தல் கும்பல் கடைபிடிக்கும் புதிய பாணியாக இது கருதப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

அந்த கொள்கலன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்ததாக கூறிய அவர், அந்த போதைப் பொருள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை கண்டறிவதற்கு விரிவான விசாரணையை தாங்கள் மேற்கொண்டு வருவதாகச் சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த கொள்கலனின் உரிமையாளரின் முகவர் என கருதப்படும் 27 வயது நபரை தாங்கள் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :