ECONOMYNATIONAL

பகாங்கில் வணிக குற்றங்கள் அதிகரிப்பு

குவாந்தான், செப் 20 – வணிக குற்றச் சம்பவங்கள் பகாங்கில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 1,410 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 1,141 ஆக இருந்தது.

மாநிலத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு மோசடி குற்றங்கள் முக்கிய காரணமாக இருந்ததாக பகாங் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரசாக் முகமது யூசுப் கூறினார்.

இவ்வாண்டு மொத்தம்  3.3 கோடி வெள்ளி மோசடியை உட்படுத்திய 1,334 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 3.5 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 1,050 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருந்தன என்றார் அவர்.

ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட வணிக குற்றங்கள் சம்பந்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 154 பேர் கைது செய்யப்பட்டனர். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை நிர்ணயித்த 150 கைது இலக்கை இது தாண்டி விட்டது என்று அவர் தெரிவித்தார்.

பகாங் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகளுக்கான 40 விழுக்காட்டு இலக்கை தாண்டி 47.38 விழுக்காட்டை பதிவு செய்துள்ளது என்று அவர் இன்று பகாங் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் ஆற்றிய உரையில் அவர் கூறினார்.


Pengarang :