ECONOMYSELANGOR

300 வெள்ளி உதவித் தொகை- தகுதியுள்ள தரப்பினரை தேடும் முயற்சியில் கோத்தா டாமன்சாரா தொகுதி தீவிரம்

ஷா ஆலம், செப் 20– கோத்தா டாமன்சாரா தொகுதியைச் சேர்ந்த சுமார் 600 பேர் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவர்.

இந்த திட்டத்தின் கீழ் 100 பேர் தற்போது மாதம் 300 வெள்ளி உதவித் தொகையைப் பெற்று வரும் வேளையில் எஞ்சியவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாதிரி மன்சோர் கூறினார்.

இந்த திட்டத்திற்கு பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அதே வேளையில் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நிலைமையைக் கண்டறியும் நடவடிக்கையிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானவையாக உள்ளன. நாங்கள் வீடு வீடாகச் சென்று சம்பந்தப்பட்டவர்களின் நிலையைக் கண்டறிவதோடு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் கேட்டறிகிறோம் என்றார் அவர்.

இந்த திட்டத்தின் கீழ் சரியான தரப்பினர் உதவி பெறுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கள ஆய்வினை  மேற்கொள்கிறோம். இதன் மூலம் சரியான தரப்பினர் உதவித் தொகை பெறுவதை உறுதி செய்ய முடியும் என்று  அவர் மேலும் சொன்னார்.


Pengarang :