ECONOMYSELANGOR

 மலிவு விற்பனையில் பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- மந்திரி புசார் 

கோலாலம்பூர், செப் 21– பொது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில் ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் சீனி, ரொட்டி உள்ளிட்ட மேலும் சில உணவுப் பொருள்கள் அதிகரிக்கப்படும்.

இதன் தொடர்பில் விநியோகிப்பாளர்களுடன் தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியை நாங்கள் தொடர்வோம். சீனி, ரொட்டி உள்ளிட்ட பொருள்களை இந்த விற்பனையில் சேர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் ஜாலில் தேசிய நீச்சல் மையத்தில் நடைபெறும் சுக்மா போட்டியின் நீச்சல் பிரிவு வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனை விலைவாசி உயர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் சுமையைக் குறைப்பதில் பெரிதும் துணை புரிகிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த மலிவு விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை மாநிலத்திலுள்ள சுமார் 80,000 பேர் பயன் பெற்றுள்ளனர்.


Pengarang :