ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் மக்களை கடும் நோயிலிருந்து காக்கும் ஆறு மருத்துவத் திட்டங்கள்

ஷா ஆலம், செப் 21– சிலாங்கூர் மக்களை கடும் நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக இலவச மருத்துவப் பரிசோதனை  திட்டம் தொடங்கி நிதியுதவி வரையிலான ஆறு சுகாதாரத் திட்டங்களை சிலாங்கூர் அரசு அமல்படுத்தியுள்ளது.

அடிப்படை சிகிச்சைகளுக்கு 500 வெள்ளி வரை நிதியுதவி வழங்கும் இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட் திட்டம், 1,000 வெள்ளி மரண சகாய நிதி, கடுமையான நோய்கள் மற்றும் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 5,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்கும் திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும்.

சிகிச்சை மேற்கொண்டு வரும் காச நோயாளிகளுக்கு 800 வெள்ளி வரை நிதியுதவி வழங்கும் டிபி நோய் சிகிச்சை திட்டமும் அவற்றில் ஒன்றாகும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இதனிடையே, இருதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு 3,000 வெள்ளி நிதி உதவியை உள்ளடக்கிய சிலாங்கூர் சாரிங் திட்டமும் இதில் உள்ளடங்கும் என்று அவர் சொன்னார்.

இருதய சிகிச்சைக்கு 50,000 வெள்ளி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளையில் குறிப்பிட்ட சில கடும் நோய்களுக்கு 5,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இது தவிர, மன நல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசக சேவை வழங்குவதற்கு மெண்டல் ஹேசாட் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :