ECONOMYHEALTHSELANGOR

தேர்தலை நடத்துவதற்கு மழை காலம் பொருத்தமான தருணம் அல்ல- கைரி கூறுகிறார்

புத்ரா ஜெயா, செப் 22– பலவேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு மழை காலம் பொருத்தமான தருணம் அல்ல என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சுகாதார பிரச்னைகள் தவிர்த்து ஆள்பலம் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு போன்ற அம்சங்களும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

தேர்தலுக்கு அதிகமான ஆள்பலம் தேவைப்படும். அதே சமயம், வடகிழக்கு பருவமழையின் போது தற்காலிக நிவாரண மையங்களை நிர்வகிப்பது, மக்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்பது போன்ற பணிகளுக்கும் கூடுதலாக மனிதவளம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, பல பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாகச் செயல்படும். அதேவேளையில் அப்பள்ளிகள் வாக்களிப்பு மையங்களாகவும் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

சுகாதார அமைச்சராக ஆகி ஓராண்டு நிறைவடைவதையொட்டி இங்குள்ள சுகாதார அமைச்சில் வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் கூறினார்.

சுகாதார ரீதியில் பார்த்தால் மோசமான வானிலை காரணமாக நீர் மூலம் பரவக்கூடிய நோய்களும் காய்ச்சல், சளி போன்ற நோய்களும் அதிகரிப்பதற்குரிய சாத்தியம் உள்ளது என அவர் சொன்னார்.

ஆகவே, வெள்ளம் ஏற்படும் சமயத்தில் தேர்தலை நடத்துவது ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்காது என்பது சுகாதார அமைச்சின் கருத்தாகும் என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த 17 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :