ECONOMYHEALTHNATIONAL

சுகாதார கிளினிக்குகளில் 8,000 குடும்ப மருத்துவ நிபுணர்கள் தேவை- நோர் ஹிஷாம்

கோத்தா கினபாலு, செப் 23- நாடு முழுவதும் சுகாதார கிளினிக்குகளில் 8,000 குடும்ப மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற வாசிகளுக்கு சிறப்பான மருத்துவச் சேவையை வழங்குவதற்கு இந்த மருத்துவர்களின் சேவை தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைவதற்காக உள்நாட்டு உயர்கல்விக் கூடங்கள் மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக் கூடங்களுடனான கூட்டுக் கல்வித் திட்டங்கள் வாயிலாக குடும்ப மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் வாயிலாக ஆண்டொன்றுக்கு 100 முதல் 120 குடும்ப மருத்துவ நிபுணர்கள் வரை உருவாக்க முடியும். மேலும் உள்நாட்டு உயர்கல்விக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் இளங்கலை பட்டப்படிப்புத் திட்டத்தின் மூலம் 100 நிபுணர்கள் உருவாக்கப்படுதை உறுத் செய்ய முடியும் என்றார் அவர்.

ஒவ்வொரு சுகாதார கிளினிக்கிலும் குறைந்தது இரு நிபுணர்கள் இருக்க வேண்டும் என்பது எங்களின் திட்டமாகும். சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை தரம் உயர்த்துவதில் அவர்கள் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவியாக இருப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோத்தா கினபாலுவில் நடைபெறும் 24வது  குடும்ப அறிவியல் மாநாட்டை நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :