ECONOMYSELANGOR

பூச்சோங் பெர்மாய் உணவு வணிக மையம் வெ.16 லட்சம் செலவில் மறுநிர்மாணிப்பு

சுபாங் ஜெயா, செப் 26- இங்குள்ள பூச்சோங் பெர்மாய் மேடான் செலேரா உணவு வணிக மையத்தை மறுநிர்மாணிப்பு செய்வதற்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் 16 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளது.

சுமார் 0.4 ஹெக்டர் நிலப்பரப்பில் 127 கடைகளை உள்ளடக்கிய இரவு நேர உணவு விற்பனை மையமான இந்த மேடான் செலேரா கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் முற்றாக அழிந்ததாக சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

ஆகவே, நாங்கள் வர்த்தக நடவடிக்கைக்காக அந்த நிலத்தை 16 லட்சம் வெள்ளி செலவில் மறுநிர்மாணிப்பு செய்ய முடிவெடுத்தோம் என்று  அவர் தெரிவித்தார்.

இந்த உணவு வணிக மையம் மாநகர் மன்றத்தின் 14வது மக்கள் பிரதிநிதித்துவ மண்டலத்திற்கான முதலாவது வணிக வளாகமாக விளங்குகிறது. இலக்கவியல்மயத் திட்டத்திற்கேற்ப இந்த மையம் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை முறையை கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மேடான் செலேரா வணிக வளாகத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் மற்றும் துணை டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முற்றுப் பெற்ற இந்த உணவு விற்பனை மையத்தில் 20 கடைகளும் மாற்றுத் திறானாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடம், சூராவ், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்று அவர் சொன்னார்.


Pengarang :