ECONOMYSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனைக்கு அமோக ஆதரவு- கோழி,முட்டை அதிகளவில் விற்பனை

சுபாங் ஜெயா, செப் 27- இங்குள்ள எஸ்.எஸ்.19/7ஏ மலிவு வீட்டு குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து  நல்ல வரவேற்பு கிடைத்தது.

இங்கு அதிகம் விற்பனையான பொருள்களில் தலா 10 வெள்ளி விலையில் விற்கப்பட்ட கோழி மற்றும் முட்டையும் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) பிரதிநிதி நோர்லிண்டா அபு காசிம் கூறினார்.

இந்த விற்பனைக்கு வருவோரின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளதோடு வேலை காரணமாக ஒரே சமயத்தில் அல்லாமல் சிறிது சிறிதாக வந்து கொண்டிருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.

இந்த மலிவு விலை விற்பனைத் திட்டத்தின் மூலம் அதிகமானோர் பயன் பெறுவதை உறுதி செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது தொகுதி ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விற்பனைத் திட்டம் குறித்து பரவலாகத் தெரிய வரும் போதுதான் நியாயமான விலையில் பொருள்கள் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இத்திட்டத்தில் அதிகமானோர் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என அவர் சொன்னார்.

நாங்கள் விற்பனைக்குத் தேர்ந்தெடுத்த இடமும் மக்கள் பிரதிநிதி அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்டது எனக் கூறிய அவர், இந்த மலிவு விற்பனை குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்துவதில் அவர்கள் எங்களுக்கு உதவ முடியும் என்றார் அவர்.

இம்மாதம் 6 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தில் பொது மக்கள் சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டுகிறது என அவர் தெரிவித்தார்.


Pengarang :