ECONOMYSELANGOR

சுங்கை துவா தொகுதியில் மலிவு விற்பனை சீராக நடைபெறுவதை உறுதி செய்ய சிறப்பு பணிக்குழு

கோம்பாக், செப் 30- சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் ஏசான் மக்கள் விற்பனைத் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி  செய்ய சிறப்பு பணிக்குழுவை தொகுதி சேவை மையம் அமைத்துள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த விற்பனைத் திட்டம் சீராக மேற்கொள்ளப்படுவதை  அக்குழுவைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் உறுதி செய்வர் என்று சேவை மையத்தின் தலைவர் மைமோன் மிஸ்மான் கூறினார்.

மலிவு விற்பனைத் திட்டம் தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய நாங்கள் சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளோம். இந்த மலிவு விற்பனை வரும் டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளதால் இத்திட்ட அமலாக்கத்தை முழுயீடுபாட்டுடன் கவனிக்கும் பணியில் அதன் உறுப்பினர்கள்  ஈடுபடுவர் என அவர் தெரிவித்தார்.

மலிவு விற்பனை தொடர்பான பட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் நான் அதனை பணிக்குழு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வேன். அந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்களில் அவர்கள் பணியில் ஈடுபடுவர் என்று லக்ஸ்மணா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று நடைபெற்ற மலிவு விற்பனையின் போது அவர் சொன்னார்.

அதிகமான மக்கள் இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்கள் விளம்பரப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்காங்கே பேனர்கள் வைப்பது, பிரசுரங்கள் விநியோகிப்பது தவிர்த்து கிராமத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாகவும் தகவல் அனுப்பப்படும் என்றார் அவர்.


Pengarang :