ECONOMYSELANGOR

பக்கத்தான் கூட்டணியின் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது- ரபிஸி தகவல்

ஜோர்ஜ் டவுன், அக் 3- வரும் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

கெடா மற்றும் சபா தவிர்த்து இதர அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்து விட்டதாக கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

அவ்விரு மாநிலங்களிலும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய பேச்சு வார்த்தையின் முடிவுகள் ஹராப்பான் தலைவர் மன்றத்தின் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என கட்சியின் தேர்தல் இயக்குநருமான அவர் தெரிவித்தார்.

வரும் புதன்கிழமை நடைபெறும் ஹராப்பான் தலைவர் மன்றக் கூட்டத்தில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்த வரை கெஅடிலான், அமானா மற்றும் ஜசெக ஆகிய கட்சிகள் கூடுதல் இடங்களைப் பெறும்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி போட்டியிட்ட 52 தொகுதிகள் ஹராப்பான் கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் பகிர்ந்து கொள்ளும் என்று அவர் சொன்னார்.

சரவா மாநிலத்தைப் பொறுத்த வரை கடந்த பொதுத்தேர்தலில் பெர்சத்து கட்சி அங்கு போட்டியிடாததால் அங்கு பிரச்னை எழவில்லை. சபாவில் மட்டும் அப்கோ கட்சியுடன் விவாதிக்க வேண்டியுள்ளது. காரணம் இதற்கு முன்னர் இந்த கட்சி ஹராப்பான் கூட்டணியில் இடம் பெறவில்லை என்றார் அவர்.

வரும் பொதுத் தேர்தலில் தாம் பாண்டான் தொகுதியில் போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதாகவும் தமது இந்த விருப்பத்தை வேட்பாளர் பட்டியல் தயாராவதற்கு முன்பாகவே கட்சித் தலைமைத்துவத்திடம் தாம் தெரிவித்து விட்டதாகவும் ரபிஸி தெரிவித்தார்.

பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரபிஸி, கடந்த 14வது பொதுத் தேர்தலில் கட்சியின் ஆலோசகர் மன்றத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயிலுக்கு வழி விட்டு போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :