ECONOMYNATIONAL

ஊழல் குற்றங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- எம்.ஏ.சி.சி. கவலை

புத்ரா ஜெயா, அக் 3- ஊழல் குற்றங்கள் தொடர்பில் பெண்களும் அதிகளவில் கைது செய்யப்படுவது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கவலை தெரிவித்துள்ளது.

பெண்களை சம்பந்தப்படுத்திய ஊழல் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எம்.ஏ.சி.சி. ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்டு வரை ஊழல் புகார்கள் தொடர்பில் 824 பெண்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களில் 356 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக அவர் சொன்னார்.

ஊழல் தொடர்பான புகார்களில் கைதான பெண்கள் அதிகாரம் உள்ளவர்களாகவும் உயர் பதவி வகிப்பர்களாகவும் உள்ளனர்.  ஊழல் தடுப்பு நிறுவனம் என்ற பெயரில் (பி.பி.ஆர்.) செயல்பட்ட காலத்தில் நான் இப்பணியில் நுழைந்த போது ஊழல் குற்றங்களுக்கான பெண்கள் கைதாவது அரிதாகவே காணப்பட்டது என்றார் அவர்.

ஊழல் என்பது அதிகாரம் உள்ள மற்றும் நம்பிக்கையும் பொறுப்பும் வழங்கப்பட்ட நபர்களை சம்பந்தப்படுத்தியதாக உள்ளது என்று பேட்டி ஒன்றில் அஸாம் பாக்கி தெரிவித்தார்.

கடந்த 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி எம்.ஏ.சி.சி. அமைக்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டில் அது சுயேச்சை ஆணையமாக மாற்றப்படுவதற்கு முன்னர் ஊழல் தடுப்பு நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.


Pengarang :