ECONOMYNATIONAL

மக்களவையில் இன்று வேலை வாய்ப்பு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் விவகாரம் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், அக் 4- தென்கிழக்காசிய நாடுகளில் வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல்களால் ஏமாற்றப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட மலேசியர்களுக்கு உதவுவதற்கான திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

வேலை வாய்ப்பு மோசடிகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இன்றைய அமர்வில் சபாக் பெர்ணம் தொகுதி பெர்சத்து உறுப்பினர் டத்தோ முகமது பைசால் முகமது பாக்கே கேள்வியெழுப்புவார் என நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான  ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி காண்பது, பண வீக்க உயர்வு மற்றும் நாட்டின் கடன் அதிகரித்து வருவது ஆகிய காரணங்களால் நாட்டில் நிதி நெருக்கடி உருவாகி வருகிறதா? என புக்கிட் பெண்டேரா தொகுதி ஹராப்பான் உறுப்பினர் வோங் ஹோன் வாய் கேள்வியெழுப்பவுள்ளார்.

பல சமயங்களில் அதிகமாகவும் நியாயமற்ற வகையிலும் இருக்கும் உள்நாட்டு விமானக் கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் போக்குவரத்து அமைச்சு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து டுங்குன் தொகுதி பாஸ் கட்சி உறுப்பினர் வான் ஹசான் முகமது ரம்லி அடுத்த கேள்வியை தொடுக்கவுள்ளார்.

பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாட் குழுவின் பங்களிப்பு குறித்து உள்துறை அமைச்சரிடம் போர்ட்டிக்சன் ஹராப்பான் உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் கோரவுள்ளார்.


Pengarang :