ECONOMYNATIONAL

உள்நாட்டு தடங்களில் சேவையை அதிகரிக்க விமான நிறுவனங்கள் இணக்கம்- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், அக். 4 – அதிக டிக்கெட் விலை பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக தேவைக்கேற்ப அவ்வப்போது உள்நாட்டு விமானச் சேவைகளை அதிகரிக்க விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

விமான டிக்கெட்டுகளின் விலை போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்யும்  நோக்கில் போக்குவரத்து அமைச்சு, மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் (மாவ்காம்) மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இந்த முடிவு காணப்பட்டதாக துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹென்றி சம் அகோங் கூறினார்.

பண்டிகைக் காலங்களில், குறிப்பாக கோலாலம்பூர் – சிபு, பினாங்கு – சிபு மற்றும் ஜொகூர் பாரு – சிபு போன்ற அதிக தேவையுள்ள வழித்தடங்களில் பயண எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் எப்போதும் விமான நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது.

இருப்பினும், அவ்வழித் தடங்களில் பயணச் சேவையை அதிகரிப்பது சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களால் எடுக்கப்படும் வணிக ரீதியிலான  முடிவாகும் என்று அவர் சொன்னார்.

மக்களவையில் இன்று டுங்குன் உறுப்பினர் வான் ஹசன் முகமட் ரம்லி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது, கோலாலம்பூர் – சிபு வழித்தடத்தில் வாரத்திற்கு 35  பயணச் சேவைகளும்  பினாங்கு – சிபு தடத்தில் ஒரு சேவையும் ஜோகூர் பாரு – சிபு தடத்தில்  ஏழு சேவைகளும் வழங்கப்படுகின்றன என்று ஹென்றி கூறினார்.


Pengarang :