ECONOMYNATIONAL

நாட்டின் கடன் 97,900 கோடி வெள்ளியாக அதிகரிப்பு- பி.ஏ.சி. கவலை

ஷா ஆலம், அக் 7- நாட்டின் கடன் மதிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டில் 97,981 கோடியே 40 லட்சம் வெள்ளியாக அபரிமித உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 10,000 கோடி வெள்ளி அதிகமாகும் என்று தேசிய கணக்காய்வுக் குழு (பி.ஏ.சி.) கூறியது.

இந்த கடன் தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.4 விழுக்காட்டிற்கு இணையானது என்று தேசிய கணக்கு தணிக்கைத் துறை வெளியிட்ட அறிக்கையையும் அது சுட்டிக்காட்டியது.

நாடு வருமானமாகப் பெறும் ஒவ்வொரு வெள்ளியிலும் 16 காசு கடனுக்கான வட்டித் தொகையை செலுத்தப் பயன்படுத்தப்படுவதாக பி.ஏ.சி. தலைவரும் ஈப்போர் தீமோர் நாடாளுமன்ற உறுப்பினருமான வோங் கா வோ கூறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த கடன் சுமை 1.298 டிரிலியனாக உயர்வு கண்டதும் இந்த கடன் மதிப்பின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது என்றார் அவர்.

அரசாங்கம் 21,720 கோடியே 10 லட்சம் வெள்ளியை கடனாகப் பெற்றுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டை விட இது 11.6 விழுக்காடு அதிகமாகும். இதில் பாதி தொகை முதிர்ச்சியடைந்த அடிப்படைக் கடனை அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது என்று அவர் விளக்கினார்.

நாட்டின் கடன் தொகை கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 2,246 கோடி வெள்ளி அதிகரித்துள்ளதாக தேசிய கணக்குத் தணிக்கை துறைத் தலைவர் டத்தோஸ்ரீ நிக் அஸ்மான் நிக் அப்துல் மஜிட் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :