ECONOMYSELANGOR

ஆட்சி கவிழ்ப்பு – மலேசியா ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்வதை தடுக்கும் ஒரு மாபெரும் சதிநாச வேலை என்கிறார் மந்திரி புசார்

ஷா ஆலம், அக் 13 – பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை 22 மாதங்களுக்குள்ளோ  கவிழ்த்த ”ஷாரட்டன் மூவ்” வெறும் ஆட்சி கவிழ்ப்பு மட்டும் அல்ல மலேசிய மக்களுக்கும்  நாட்டுக்கும் எதிரான ஒரு மாபெரும் சதி, கீழறுப்பு என்பதை சிலாங்கூர் மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வணக்கம் மலேசியா இணையதளத்துடனான பேட்டியில்  குறிப்பிட்டார்.

மலேசியா ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்வதை தடுக்கும் ஒரு மாபெரும் சதிநாச வேலை அது என அவர் குறிப்பிட்டதற்கு காரணங்களாக நீண்ட நாட்களாக, பல மட்டங்களில் ஆழமாக பரவி சமுதாயத்தையும் நாட்டையும் அழித்து வரும் ஊழல் மற்றும் இன துவேஷத்தை குறிப்பிட்டார்.

2008க்கு பின் பக்காத்தான் மாநிலங்களில் கிடைத்த தேர்தல் வெற்றிகள், பல இன மேம்பாட்டு திட்டங்களுக்கும், ஒற்றுமைக்கும் நாம் தொடர்ந்து அளித்து வரும் அதி முக்கியத்துவம் காரணம் என்றார்.

அதுவே, நாம் தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு வளர உதவி உள்ளது.  ஆனால், இது இன ரீதியாக செயல்படும் கட்சிகளுக்கு பெரிய மிரட்டல். அவர்கள் நீண்ட காலமாக மக்களை வேறுபடுத்தி, இனங்களுக்கிடையே அச்சுறுத்தல்களை விதைத்து  அரசியல் நடத்தி வந்தனர்.

மக்கள் ஒன்றுபடுதலை விரும்பாத பிரிவினர் வீசிய, பணம் மற்றும் பதவி வலையில் சிக்கிய பேராசை கொண்ட கும்பலின் ஆட்சி எத்தனை காலம் நீடித்தது, இப்பொழுது, ஆட்சி மீண்டும் ஊழல் மற்றும் இன, சமய தீவிர வாத பிரிவினர் கைகளில் விழுந்து விட்டது.

மிக முக்கியமாக, எல்லா இடையூறுகளின் மத்தியில் பக்காத்தான் மக்களின் உரிமையை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தது. அதன் முக்கிய அம்சம் கட்சித்தாவல் தடை சட்டம்.  கடந்த 65 ஆண்டுகளாக மலேசியாவில் நிகழ்ந்து வந்த சாக்கடை அரசியலுக்கு, பக்காத்தான் முடிவு கட்டியது.

நீண்ட நாட்களாக மக்களின் வாக்குரிமை பெற்று, ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க தவறிய போக்கை கண்டிக்க, தடுத்து நிறுத்தும் ஒரு சட்டமாக, இன்று கட்சித் தாவல் தடை சட்டம் நிறைவேற பக்காத்தான் முழு முதல் காரணம்.

இன ரீதியான அரசியல் பிரிவுகள், மற்றும் கட்சிகள் நிச்சயமாக அதில் திருப்தி கொள்ள இயலாது. அது அவர்களின் அரசியல் அஸ்திவாரத்திற்கு மிரட்டல் என்பதால் பலவாறாக  பக்காத்தானை ஆட்டி, மிரட்டி வந்தன. ஆனால் மக்கள் முன்பை விட இன்னும் தெளிவாக, ஒற்றுமையாக இருக்கிறோம்.

குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல இன மக்கள் இணைந்து செயல் பட்டது இம்மாநில மக்களின் ஒற்றுமையை காட்டியது என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.


Pengarang :