ECONOMYHEALTHSELANGOR

2023  பட்ஜெட்டில் மனநல ஆரோக்கியத் திட்டத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு- கம்போங் துங்கு உறுப்பினர் நம்பிக்கை

பெட்டாலிங் ஜெயா, அக் 13 – விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2023 பட்ஜெட்டில் மனநலம் தொடர்பான திட்டங்களை அமல் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்படும் அதேவேளையில் நடப்புத் திட்டங்கள் நிலைநிறுத்தப்படும்  என்று தாம் எதிர்பார்ப்பதாக  கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு பிந்தைய சவால்கள் மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு ஆகிய பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில்  தனிமனித மனநலம் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

சமூகத்திற்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தனிமனித மனநலப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் ரக்பி யூனியன் 2022 மகளிர் சாம்பியன்ஷிப் (கம்போங் துங்கு தொகுதி  கிண்ணம்) போட்டியின் போது செய்தியாளர் கூட்டத்தில் லிம் இவ்வாறு கூறினார்.

மாநில அரசு செல்கேர் கிளினிக்குகளில் முதன் முறையாக மேற்கொள்ளப்படும் சிறப்பு பரிசோதனை மற்றும் மருந்துகளுக்கு மானியம் வழங்குவதன் மூலம் மனநல உதவியை மேம்படுத்தலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

முன்னதாக, மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மாநில அரசு புறக்கணிக்காது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

சிலாங்கூர் மெண்டல் சேஹாட் (சேஹாட்) இயங்கலை திட்டத்தின் மூலம்  இலவச ஆலோசகர் உதவியை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மனநலப் பிரச்சினைகளை இலகுவாகப் பார்க்கவோ அல்லது இலகுவாக எடுத்துக்கொள்ளவோ கூடாது என்பதால் மறைமுக ஆதரவின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

சேஹாட் என்பது சிலாங்கூர் குடிமக்களுக்கு மனநலப் பிரச்சினைகளைக் கையாள  மாநில அரசாங்கத்தால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

சேஹாட் ஆலோசகர்களை 1700-82-7536 அல்லது 1700-82-7537 என்ற எண்ணில், செலங்கா ஆப் மூலம் அல்லது http://www.drsitimariah.com/sehat என்ற அகப்பக்கம் மூலம் தொடர்பு கொள்ளலாம் .


Pengarang :