ECONOMYSELANGOR

இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரத்தை மேம்படுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை- மந்திரி புசார்

ஷா ஆலம், அக் 13– இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக கல்வி மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தொழில் முனைவோர் மற்றும் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக பல நீண்டகாலத் திட்டங்களை மாநில அரசு பிரத்தியேகமாக அமல்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக தொழில் பயிற்சிகளை வழங்கக்கூடிய இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்), இந்திய தொழில் முனைவோருக்கு வர்த்தக கடனுதவி வழங்கக்கூடிய யாயாசான் ஹிஜ்ரா திட்டம் ஆகியவையும் அவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு கடனுதவியும் மாணவர்களுக்கு உணவும் வழங்கினால் போதும் என்று மாநில அரசு நினைக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் உதவிகளை வழங்க விரும்புகிறது என்றார் அவர்.

இம்மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார நிலை தொடர்பில் வணக்கம் மலேசியா இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இம்மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஆண்டுதோறும் 50 லட்சம் வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :