ECONOMYNATIONAL

பள்ளி நடவடிக்கையில் பாதிப்பைத் தவிர்க்க சனிக்கிழமை வாக்களிப்பை நடத்துவீர்- கல்வியமைச்சர் வலியுறுத்து

புத்ராஜெயா, அக் 14- பள்ளி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய பதினைந்தாவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை நடத்தப்பட வேண்டும் என்று மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் ஆலோசனை கூறியுள்ளார்.

சனிக்கிழமை தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் எளிதாக மேற்கொள்ள முடியும் என அவர் சொன்னார்.

வழக்கமாக வார இறுதி நாட்களில் வாக்களிப்பு நடைபெறுவதை நாம் கண்டு வருகிறோம். பள்ளி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இம்முறையும் அவ்வாறே செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

சனிக்கிழமை தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும். காரணம் ஒரு சில மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு லீ டுவர் லங்காவி சைக்கிளோட்டப் போட்டியின் புத்ராஜெயா-லங்காவி இடையிலான மூன்றாம் கட்ட பந்தயத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வார நாட்களில் தேர்தல் நடத்தப்பட்டால் பள்ளி நடவடிக்கைகளுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையம் பள்ளிகளைப் பயன்படுத்துவது குறித்து தமது தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இவ்விவகாரத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளும் என்றும் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :