ECONOMYSELANGOR

மக்கள் நலனை தொடர்ந்து பேணிகாக்க மாநில அரசு விரும்புவதை சுல்தான் கவனத்தில் கொண்டுள்ளார்

ஷா ஆலம், அக் 14- மக்கள் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு தொடர்ந்து செயல்பட விரும்புவதை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கவனத்தில் கொண்டுள்ளார்.

இவ்வாண்டில் தேர்தலை நடத்துவதற்காக மாநில சட்டமன்றம் கலைக்கப்படாது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட செய்தியில் சற்று பொருள் பிறழ் உள்ளது என்று மேன்மை தங்கிய சுல்தானின் தனிச் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின் போது மாநில அரசு நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதன் அடிப்படையில் சட்டமன்றத்தை இவ்வாண்டில் கலைப்பதற்கு மந்திரி புசார் சுல்தானிடம் விண்ணப்பத்தை முன்வைக்கவில்லை.

சுல்தானும் இதனைக் கவனத்தில் கொண்டுள்ளதோடு, மக்கள் நலனுக்காக ஏற்கனவே தீட்டப்பட்ட திட்டங்களை  அரசு தொடர்ந்து அமல்படுத்தும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டார் என டத்தோ முகமது மூனிர் பானி தெரிவித்தார்.

நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த 10ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதிகளை நிர்ணயிப்பதற்காக தேர்தல் ஆணையம் வரும் 20 ஆம் தேதி கூடுகிறது.


Pengarang :