ECONOMYSELANGOR

பாண்டான் இண்டா தொகுதியில் 800 பேருக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகள் விநியோகம்

அம்பாங், அக் 17- தீபாவளியை முன்னிட்டு பாண்டான் இண்டா தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களுக்கு மொத்தம் 800 ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி இங்குள்ள ஜெயண்ட் பாண்டன் கேபிட்டல் பேரங்காடியில் நேற்று நடைபெற்றதாக பாண்டான் இண்டா தொகுதி உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

இலவச பற்றுச்சீட்டுகள் தவிர்த்து முறுக்கு மாவு உள்பட அன்றாட தேவைக்கான பொருட்களும் அவர்களுக்கு வழங்கப் பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக வாகன நிறுத்துமிடத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தீபாவளி பற்றுச்சீட்டு பெறுவோர் பட்டியலில் இடம் பெறாதவர்களும் எங்களிடம் உதவி நாடி வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு உணவு கூடைகளை வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு நடத்தப்படும் மலிவு விற்பனையில் கலந்து பொருட்கள் வாங்குவோருக்கு உதவும் வகையில் 10 ரிங்கிட்டுக்கான கூப்பன்களையும் தாங்கள் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் நாங்கள் எடுத்துள்ள முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் அவர்கள் மலிவான விலையில் பொருட்கள் வாங்கும் அதே வேளையில் 10 ரிங்கிட்டுக்கான கூப்பன்களையும் பெறுகின்றனர் என்றார் அவர்.


Pengarang :