ECONOMYSELANGOR

லங்காவியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 37 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

லங்காவி, அக் 17- இங்கு நேற்று  மாலை 4.00 மணி முதல் பெய்த அடைமழை காரணமாக கம்போங் அத்தாஸ் வட்டாரத்திலுள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் டேவான் ஷிஃபா துயர் துடைப்பு மையத்தில் நேற்றிரவு அடைக்கலம் நாடியுள்ளனர்.

வெள்ள அகதிகளை தங்க வைப்பதற்காக அந்த துயர் துடைப்பு மையம் நேற்றிரவு 8.00 மணிக்கு திறக்கப்பட்டதாக லங்காவி மாவட்ட பொது தற்காப்புத் துறையின் அதிகாரி அகமது ஷாபிக்ரி டாருள் கூறினார்.

கடும் மழை காரணமாக வெகு வேகத்தில் ஏறிய வெள்ளம் மாலை 6.00 மணியளவில் வீடுகளில் புகுந்தது. ஆயர் ஹங்காட் மற்றும் குவா உள்ளிட்ட மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனினும் வெள்ளம் விரைவாக வடிந்த காரணத்தால் அங்கு துயர் துடைப்பு மையம் ஏதும் திறக்கப்படவில்லை என்றார் அவர்.

வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு தமது தரப்பு தொடர்ந்தாற்போல் ஆறுகளில் நீர் மட்டத்தை கண்காணித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :