ECONOMYNATIONAL

தீபாவளியை முன்னிட்டு உச்சவரம்பு விலைப் பட்டியலில் எட்டு உணவுப் பொருள்கள்

கோலாலம்பூர், அக் 17- இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்சவரம்பு விலைப் பட்டியலில் எட்டு அத்தியாவசியப் பொருள்களை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு சேர்த்துள்ளது.

எலும்புடன் கூடிய இறக்குமதி செய்யப்பட்ட செம்மறி ஆட்டிறைச்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், தேங்காய் (மொத்த விற்பனை நிலையில் மட்டும்) ஆகியவை அந்த உச்சவரம்பு விலை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமது யூசுப் கூறினார்.

இவை தவிர துருவல் தேங்காய் (சில்லறை விற்பனை நிலையில் மட்டும்), சிறிய  வெங்காயம் (இந்தியா). பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவை உணவுப் மூலப் பொருள்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 20 ஆம் தேதி தொடங்கி வரும் 26ஆம் தேதி வரை இந்த உச்சவரம்பு விலை  அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடப்பு நிலவரத்திற்கேற்ப இந்த உச்சவரம்பு விலை  நிர்ணயம் அமல்செய்யப்படுகிறது. இதன் மூலம் பயனீட்டாளர்களும் வாடிக்கையாளர்களும் சமமான அளவு பயன்பெற இயலும். வாடிக்கையாளர்கள் நியாயமான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினைப் பெறும் அதே வேளையில்  இலகுவான அமலாக்க காலம் வியாபாரிகளுக்கும் மனநிறைவைத் தரும் என்றார் அவர்.

இந்த உச்சவரம்பு விலை நிர்ணயிக்கப்பட்ட பொருள்கள் தொடர்பான விபரங்களை www.kpdnhep.gov.my  என்ற உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கோழி மற்றும் முட்டை ஆகியவை இம்மாதம் 12ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :