ECONOMYNATIONAL

“ஆசியாவின் புலி“யாக மலேசிய மீண்டும் விளங்க சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்- அன்வார் வலியுறுத்து

மெந்தகாப், அக் 20- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் சரியான தலைவர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பொருளாதாரத்தில் “ஆசியாவின் புலி“ என்ற அந்தஸ்தை மலேசியா மீண்டும் பெற முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஆசியாவின் புலி என்ற அந்தஸ்தை மலேசியா இழந்து விட்டதோடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வியட்னாம் மற்றும் தாய்லாந்தை விட பின்தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித்  தலைவருமான அவர் சொன்னார்.

நான் நிதியமைச்சராக இருந்த போது நாட்டின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9 முதல் 10 விழுக்காடு வரை இருந்தது. அனைத்துலக முதலீடும் பங்குச் சந்தையும் சிங்கப்பூருடன் போட்டியிடும் அளவுக்கு முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால் இப்போது மலேசியா ஊழலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் சொன்னார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற பகாங் மாநில நிலையிலான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டவரால் நிலைமையைச் சரி செய்யவும் அனைத்துலக நிலையில் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவது இயலுமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மலாய் அல்லது ஆங்கிலத்தில் சரியாக பேசத் தெரியாவிட்டால் பாதகமில்லை. அனைத்துலக கவனத்தை ஈர்க்கவும் ஆசியாவின் புலி என்ற அந்தஸ்தை மீட்டெடுக்கவும் கூடிய ஆற்றல்மிக்கத் தலைவராக விளங்குவது அவசியம் என அவர் சொன்னார்.

தேசிய, தமிழ் மற்றும் சீனப்பள்ளி மாணவர்கள் மத்தியில் காணப்படும் கல்வி இடைவெளி சரி செய்யப்பட வேண்டும் என்றும் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அன்வார் வலியுறுத்தினார்.


Pengarang :