ECONOMYNATIONAL

கடுமையாக உழைத்தால் பாரிசான் கோட்டையை ஹராப்பான் கைப்பற்ற முடியும்- அமிருடின் நம்பிக்கை

மெந்தகாப், அக் 20- கடுமையான உழைப்பும் உத்வேகமும் இருந்தால் வரும் பொதுத் தேர்தலில் பகாங் மாநிலத்தை பாரிசான் நேஷனல் கூட்டணியிடமிருந்து பக்கத்தான் ஹராப்பான் கைப்பற்ற முடியும்.

பாரிசான் கோட்டையாக இருநாள் வரை இருந்து வரும் பகாங் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் ஊடுருவுவதற்கு அந்த கூட்டணிக்கு பொதுமக்கள் தொடர்ந்து வற்றாத ஆதரவை வழங்குவது அவசியம் என்று  பகாங் மாநில ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நம்மிடம் உள்ள உத்வேகத்தைக் கொண்டு வரும் பொதுத் தேர்தலில் பகாங் மாநிலத்தை ஹராப்பான் கூட்டணி வெல்ல முடியும் என நான் நம்புகிறேன். இந்த வெற்றியை அடைவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஒருவரை மட்டும் சார்ந்திருக்க க்கூடாது என்று அவர் சொன்னார்.

பகாங் மாநிலத்தை மாற்ற முடியாது என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும் என்று மெந்தகாப் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற பகாங் மாநில நிலையிலான தேர்தல் பிரச்சார பயண நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமான சில சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டை பக்கத்தான் கூட்டணி மீண்டும் ஆள முடியாது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசை நாம் இழந்தோம். அதனைத் தொடர்ந்து சபாவில் வாரிசான் ஆட்சியைத் தக்க வைக்க முடியாமல் போனது. இடைத்தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவினோம். நாம் முற்றாக முடங்கி விட்டோம் என அம்னோ நினைக்கிறது. நாம் மீண்டும் எழ இயலாது எனவும் அது கருதுகிறது.

ஹராப்பான் கூட்டணியைப் பிளவுபடுத்த அம்னோ பாரிசான் கூட்டணி முயற்சிக்கிறது. ஆயினும், வரும் பொதுத் தேர்தலில் நாம் புத்ராஜெயாவை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையை மெந்தகாப் மற்றும் தெமர்லோ மக்கள் நமக்கு வழங்கியுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :