ECONOMYNATIONAL

பொதுத் தேர்தல், புகாயா இடைத் தேர்தலை நடத்த வெ.101 கோடி செலவு பிடிக்கும்

புத்ராஜெயா, அக் 21- பதினைந்தாவது பொதுத் தேர்தல் மற்றும் புகாயா சட்டமன்ற இடைத் தேர்தலை நடத்துவதற்கு 101 கோடி வெள்ளி செலவு பிடிக்கும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே கூறினார்.

பொதுத் தேர்தல் மற்றும் புகாயா சட்டமன்ற இடைத் தேர்தல் பணியில் மொத்தம் 363,515 ஊழியர்கள் ஈடுபடுவர் என்று தேர்தல் தொடர்பான சிறப்பு கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

இது தவிர வழக்கமான வாக்களிப்புக்கு  38,348 வாக்களிப்பு நிலையங்களை உட்படுத்திய 8,958 வாக்களிப்பு மையங்களும் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான 970 வாக்களிப்பு நிலையங்களை உட்படுத்திய 578 வாக்களிப்பு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தல் மற்றும் புகாயா சட்டமன்ற இடைத் தேர்தலை நடத்துவதற்கு 222 தேர்தல் அதிகாரிகளும் 1,264 துணை தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ தேர்தல் பரப்புரை காலத்தில் பிரசார நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடக்கூடிய 625 தேர்தல் பிரசார அமலாக்க குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இதில் காவல் துறையினர், ஊராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

பொதுத் தேர்தலின் போது 222 வேட்பு மனுத் தாக்கல் மையங்களும் 222 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :